தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் அதிகாரிகளுடன் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார்.
ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து, உரையாற்றினார்.
மேலும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வேலஸ்க்ஸ் (Carlos Velazquez) மற்றும் இந்திய இயக்குநர் நிர்மல் குமார் ஆகியோருடன் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தொடர்ச்சியாக ஸ்பெயின் நாட்டில் பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது.
சரக்கு முனையங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹைபக் லாய்டு நிறுவனத்துடன் 2,500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஸ்பெயின் நாட்டின் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார்.
அரசு முறை பயணம் மேற்கொண்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்றனர்.