எளிதில் ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் – காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் அண்மை காலமாக கஞ்சா விற்பனை, திருட்டு, விபச்சாரம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் காவல்துறை உயரதிகாரிகளுடன் இன்று வழுதாவூர் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், புதுச்சேரியில் சமீப காலமாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இனிவரும் காலங்களில் குற்றங்களை தடுக்க காவல்துறை முனைந்து செயல்பட்டு புதுச்சேரியில் ரவுடிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பது அதிகரித்துள்ளது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதை தவிர்க்க என்ன நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ஜாமீனில் வராதபடி அவர்கள் மீது போடப்படும் வழக்கு உறுதியாக இருக்க வேண்டும்.

அவ்வாறு குற்றவாளிகள் எளிதில் ஜாமீனில் வெளியே வரும் வகையில் வழக்குப்பதிவு செய்யும் காவலர்கள் மீது நானே நேரடியாக நடவடிக்கை எடுக்கப்பேன் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்தார்.