மாநில கல்லூரி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு மாநகர பேருந்தில் (தடம் எண் 2 A) சென்று கொண்டிருந்தனர்.
பேருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே வரும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கல்லூரி மாணவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் திடீரென மாநில கல்லூரி மாணவர்கள் மீது பாட்டில் மற்றும் கற்களை கொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் நடுரோட்டில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். புதுக்கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர்கள் ராஜேஷ், மோகன்ராஜ், சிவபதி ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 3 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து மாநில கல்லூரி மாணவர்கள் சரண், விக்னேஷ், சிவா, சூர்யா உட்பட 9 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய புதுக்கல்லூரி மாணவர்கள் 15 பேரை போலீஸார் தேடிவருகின்றனர்.