சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைகேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,924,50க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.12.50 காசுகள் உயர்ந்து ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது.