மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 6,000 ரூபாய் வழங்கும் பணியை சென்னை வேளச்சேரியில் உள்ள சக்தி விஜயலட்சுமி நகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினார்.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுமார் 37 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களிலும் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் வழங்கப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி,
பூந்தமல்லி ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் காலை 10 மணிக்கு தொடங்கி வைத்த பின் 10;15 மணி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும்.
அடுத்து வரும் நாட்களில் ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் டோக்கன் அடிப்படையில் நிவாரண நிதி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.