வாகனத்தில் தொங்கியபடி பயணம் : சென்னை மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார்

சென்னை மேயர் பிரியா முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்ததால் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து நேற்று முன்தினம் காசிமேடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர்.

இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் 93-வது பிரிவின் கீழ் குற்றம் என்றும் இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பொதுமக்கள் வாகனத்தில் தொங்கியபடி பயணித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுபோல இதுவும் சட்ட சட்டவிரோதமான செயல்தான் எனவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.