அஜித்தின் துணிவு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த படத்தின் கொண்டாட்டத்தின்போது, கல்லூரி மாணவர் ஒருவர், லாரி மீது ஏறி சென்று நடனமாடியுள்ளார். பின்னர், லாரியில் இருந்து இறங்கும்போது, கீழே விழுந்து, முதுகு தண்டில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.
இந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமே.. உயிர் போகும் அளவிற்கு சினிமா முக்கியமானது அல்ல” என்று பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், விஜய், அஜித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில், இருதரப்பினர் இடையே பகைமை வளர்த்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், கவனக்குறைவுடன் செயல்பட்ட திரையரங்க நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.