நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தர பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மந்தமாக நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அப்டேட்டுகள் தாமதமாக பதிவேற்றப்படுவதாக பல்வேறு மாநிலங்களில் இருந்து புகார் வருவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அப்டேட்டுகளை தாமதம் இல்லாமல் பதிவேற்ற வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.