“அம்பேத்கரை அசிங்கப்படுத்திய காங்கிரஸ்” – பிரதமர் மோடி கடும் தாக்கு!

“கடவுள் ராமரை விட, தங்களை பெரியவர்களாக, காங்கிரஸ் கட்சி நினைக்கிறது” என்று பிரதமர் நரேந்திரர மோடி, கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களை இகழ்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். ராமர் கோவில் எப்போது கட்டப்படும் என்று, அனைத்து தேர்தல்களிலும், எங்களிடம் கேட்கப்பட்டது.

நாங்கள் அவர்களுக்கு தேதி, நேரம் மற்றும் அழைப்பிதழை கூட அனுப்பி வைத்தோம். ஆனால், அவர்கள் அந்த அழைப்பிதழை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் ஊர்வலத்தில், பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பிரதமர், “காங்கிரஸ் கட்சி, மதத்தின் பெயரால் நாட்டை பிளவுப்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சியின் டி.என்.ஏவிலேயே, வாக்கு வங்கி மற்றும் சமாதானப்படுத்தும் அரசியல் நிறைந்துக் கிடக்கிறது. 2014-க்கு முன்பு, 60 வருடங்களாக, காங்கிரஸ் கட்சியின் ஒரே குடும்பம் தான், மறைமுகமாகவோ நேரடியாகவோ, அரசாங்கத்தை நடத்தி வந்துள்ளன” என்று விமர்சித்தார்.

“கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி, தென்னிந்தியா தனி நாடாக அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் மற்றும் இந்தியாவின் அரசியல் சாசனம் கோவாவிற்கு பொருந்தாது என்று அப்பகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கூறியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சியினர் பேசுவது, பாபா சாகேப் அம்பேத்கரையும், இந்தியாவையும் அசிங்கப்படுத்துவது ஆகும்” என்று சாடினார்.

ராமர் கோவில் திறப்பு குறித்து பெருமையுடன் பேசிய பிரதமர் மோடி, “அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற நம்பிக்கையை நாட்டு மக்கள் கொடுத்திருந்தனர். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், பாஜக ராமர் கோவிலை கட்டி முடித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

“ ‘சாப்க சாத், சப்க விகாஸ்’ என்ற மந்திரத்தை தான், பாஜக பின்பற்றுகிறது. ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் நலன் தான் எங்களுக்கு முக்கியம்” என்று தெரிவித்து, தனது உரையை பேசி முடித்தார்.

RELATED ARTICLES

Recent News