மேற்கு வங்கத்தில் காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் கைகோத்து, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், கஜோல் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மம்தா பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:
கடந்த 19-ஆம் தேதி தேதி தொடங்கிய மக்களவைத் தேர்தல், ஏழு கட்டங்களாக ஜூன் 1 வரை நடத்தப்படுகிறது. வழக்கமாக மே மாதத்துக்குள்ளாக தேர்தல் முடிந்துவிடும். இம்முறை ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் காலகட்டத்தில், பிரதமர் மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் அரசு செலவில் சிறப்பு விமானங்களில் பயணித்து பிரசாரம் மேற்கொள்கின்றனர். பிரதமர் மற்றும் பாஜகவின் பிரசாரத்துக்கு உதவவே ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.
எதிர்க்கட்சிகளைப் பொருத்தவரை, எங்களது போக்குவரத்துக்கு ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை நாங்களே ஏற்பாடு செய்கிறோம். அதிலும் பாஜக தலைவர்கள் முன்பதிவு செய்வதால், எங்களுக்கு இடம் கிடைப்பதில்லை.
சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதிப்படும் சூழலில், பிரதமருக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில், பிரதமர் உள்பட பாஜக தலைவர்கள் ‘விவிஐபி’ வசதிகளுடன் பிரசாரம் செய்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, அரசு இயந்திரத்தை இயக்கும் பொறுப்பில் தேர்தல் ஆணையமே உள்ளது. எனினும், பிரதமர் மோடி மற்றும் அவரது சகாக்களின் கட்டளையின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி, ஏழைகளுக்கான வீட்டு வசதி திட்டம் குறித்த விவகாரங்களில் இம்மாநிலத்துக்காக குரல் கொடுக்கவில்லை. மேற்கு வங்க மக்களுக்காக இந்த எம்.பி.க்கள் என்ன செய்தனர்?
மாநிலத்தில் காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கட்சியும் கைகோத்து, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கின்றன. எனவே, திரிணமூல் காங்கிரஸ் அல்லாத எந்த வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்க வேண்டாம்.
இந்தியா கூட்டணிக்கான பெயரை நான்தான் உருவாக்கினேன். ஆனால், அந்த கூட்டணி மேற்கு வங்கத்தில் கிடையாது. அது மாநிலத்துக்கு வெளியேதான் உள்ளது.
மத்திய பாஜக அரசின் அராஜகங்களுக்கு எதிராக எனது கட்சி எப்போதும் போராடும். மணிப்பூரில் இனக் கலவரத்தின்போது தேவாலயங்கள், மசூதிகள், இதர வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டன. மத்திய, மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்த்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நின்றது திரிணமூல் காங்கிரஸ்.
இடிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களை கட்டித் தந்துள்ளோம். அயோத்தி ராமர் கோயில் பற்றி பாஜக பெருமை பேசுகிறது. ஆனால், பாஜக ஆட்சியில் எத்தனை கோயில்கள் கட்டப்பட்டன? மேற்கு வங்கத்தில் எனது ஆட்சியில் துர்கா, காளி, ஜெகந்நாதர் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
சமூக ஊடங்களில் பொய்யான தகவல்கள், விடியோக்களை பரப்பி, கலவரத்தை தூண்டுகிறது பாஜக என்றார் மம்தா பானர்ஜி.