காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.யினருக்கு எதிரான கட்சி என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா பங்கேற்று பேசினார்.
அவர் பேசியதாவது, “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு வரம்பைக் குறைத்து, அதன்மூலம் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. பாஜக இருக்கும் வரை, சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காது என்று ராகுலை எச்சரிக்கிறேன்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், பழங்குடியினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு அம்பேத்கரால் கொண்டு வரப்பட்டது; நீங்கள் அவரை அவமதிக்கின்றீர்கள். காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி.யினருக்கு எதிரான கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம், ஓ.பி.சி.யினருக்கு அநீதி இழைத்தார்கள். மண்டல் கமிஷன் ஓ.பி.சி.யினருக்கு இடஒதுக்கீடு வழங்கியபோது, அதனை இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் எதிர்த்தனர்.
ஆனால், 2014 ஆம் ஆண்டில், மோடி ஆட்சியில் ஓ.பி.சி.யினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தையும் அமைத்து, அதற்கான அரசியலமைப்பு இடத்தைக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.