பிரதமரை புகழ்ந்த காங்கிரஸ் எம்.பி.! எதற்காக தெரியுமா?

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 3 வருடங்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரில், உக்ரைனுக்கு சில நாடுகளும், ரஷ்யாவுக்கு சில நாடுகளும், தங்களது ஆதரவை தெரிவித்தன. ஆனால், இரண்டு நாடுகளுக்கும், தங்களது ஆதரவை இந்தியா தெரிவித்திருந்தது.

இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், ஆக்கிரமிப்பு செய்ததற்காக, ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் ரைசினா உரையாடல் என்ற மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சசி தரூர், “2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின்போது, ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில், இந்தியாவில் நிலைப்பாடு குறித்து, நான் விமர்சித்திருந்தேன். அதனால், தற்போது எனக்கு தர்ம சங்கடமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

அதாவது, “தற்போது இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலமாக, இரண்டு நாடுகளிடையேயும், இந்தியா நல்ல உறவை வைத்துக் கொள்ள முடிகிறது” என்று, ஒத்துக்கொண்டுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தற்போது இரண்டு நாட்டின் அதிபர்களையும் சந்திக்க முடிகிறது. இது, இந்த போரில் இந்தியாவின் தனித்துவமான இடத்தை தான் காட்டுகிறது என்றும் புகழ்ந்து தள்ளினார்.

தொடர்ந்து பேசிய சசி தரூர், “உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்பட்டால், உக்ரைனுக்கு இந்தியாவின் அமைதிப் படையை அனுப்பி வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை பரிசீலிக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மேலும், அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் 49 முறை, இந்தியா கலந்துக் கொண்டுள்ளதை மேற்கோள் காட்டி, உலக நிலைத்தன்மையில் இந்தியாவின் அர்ப்பணிப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி, பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News