தொடர் விடுமுறை: விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு!

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை, வரும் திங்கள் கிழமை 15 ஆம் தேதியில் இருந்து, 17 ஆம் தேதி புதன்கிழமை வரை கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிறு சேர்ந்து வருவதால், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது.

இதை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தவர்கள், விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் இன்று சனிக்கிழமை பயணிகள் கூட்டம், வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

இதை அடுத்து சென்னையில் இருந்து, வெளி மாவட்டங்களில் செல்லும் உள்நாட்டு விமானங்களில், டிக்கட்டுகள் கட்டணங்கள் பல மடங்கு, உயர்ந்து உள்ளன. ஆனாலும் கட்டண உயர்வை குறித்து கவலைப்படாமல், பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு, கூடுதல் கட்டணங்கள் செலுத்தி, விமானங்களில் பயணிக்கின்றனர். கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ள அதே நேரத்தில், டிக்கெட் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளதால், பயணிகள் கட்டணம் உயர்வை பற்றி கவலைப்படாமல் உடனடியாக, ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624. இன்று கட்டணம் ரூ.13,639.

சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367.இன்று ரூ.17,262.

சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264. இன்று ரூ.11,369.

சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315. இன்று ரூ.14,689.

சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290. இன்று ரூ.11,329.

இதேபோல் பல மடங்கு கட்டண உயர்வு இருந்தாலும், பயணிகள் பலர் டிக்கெட் கிடைக்காமல், தவிக்கின்றனர். எனவே இதைப் போன்ற விழாக்காலங்களில், சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுவது போல், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு விமானங்கள், இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

RELATED ARTICLES

Recent News