தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறையையொட்டி விடப்பட்ட சிறப்புப் பேருந்துகள் புதன்கிழமை வரை இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் இன்றும், நாளையும் கொண்டாடப்பட்டு வருகின்றன. முன்னதாக, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டதால், பெரும்பாலானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.
பயணிகளின் வசதிக்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னையிலிருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தங்கள் மூலம் தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் கடந்த 2 நாள்களில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதன்கிழமை வரை பிற பகுதிகளிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.