கர்நாடகாவில் வரும் மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவின் கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது “பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்க்கலாம். நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள்” என பேசியுள்ளார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கே தனது வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பிரதமர் மோடியை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது பாஜகவின் கொள்கைகளைத்தான். பாஜகவின் கொள்கைகளைத்தான் நான் பாம்பு என்றேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை கூறவில்லை. பாஜகவின் கொள்கைகள் பாம்பு போன்றது. நீங்கள் அதைத் தொட முயன்றால் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என விளக்கம் கொடுத்துள்ளார்.