2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டது என அனைவரும் பெருமூச்சு விட்ட சூழலில் தற்போது மீண்டும் அந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.
அந்த வகையில் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை மருத்துவர்கள் ஆய்வு செய்த போது இது ஜேஎன் 1 வகை கொரோனா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் கேரளாவில் 280 பேருக்கு இந்த கொரோன தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த கொரோனா தொற்றுக்கு நேற்று ஒருவர் பலியான நிலையில், இன்று மேலும் ஒருவர் இறந்திருக்கிறார். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.