திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை, காமராஜர் வளைவு பகுதியில் நிறைவு செய்தார்.
அங்கு அவர் பேசியது:
திமுக அமைச்சர்கள் 11 பேர் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. இங்குள்ள திமுகவினரில் கொள்ளையடிப்பதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கல் குவாரி ஏலம் எடுக்கச் சென்ற பாஜக நிர்வாகிகளை தாக்கிய அமைச்சர் சிவசங்கர் ஆதரவாளர்களை பாஜக விடப்போவதில்லை.
உப்புத் தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். உங்கள் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். தான் செல்லும் இடங்களில் எல்லாம் தமிழுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர் பிரதமர் மோடி. 11-வது இடத்திலிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு முன்னேற்றியவர் மோடி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரது கரத்தை வலுப்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.