கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையை தடுப்பது மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்பது குறித்து தஞ்சாவூரில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்களின் வீடுகளுக்கு அருகிலோ, பொது இடங்களிலோ, அல்லது கிராமத்தின் மறைவானப் பகுதிகளிலோ யாரவது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, அல்லது விற்பனை செய்தாலோ பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண். 10581 அல்லது வாட்ஸ்அப் (Whatsapp செயலி எண். 9042839147 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தியின் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. தகவல் தெரிவித்திடும் நபர்களின் பெயர் மற்றும் விபரங்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்த விற்பனை செய்வதை தடுத்திடும் பொருட்டு டாஸ்மாக் மேலாளர்கள் தொடர்ந்து கண்காணித்திடவும், அளவுக்கதிகமான மதுபாட்டில்கள் வைத்திருக்கும் நபர்களை கண்டறிந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.