ஏர் அரேபியன் விமானம், அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவரை சோதனை செய்ததில், கார்களை கழுவும் மெஷின் பைக்குள் இருந்தது தெரியவந்தது. பார்ப்பதற்கு வித்தியாசமாக அந்த மெஷின் இருந்ததால், அதனை அதிகாரிகள் கழற்றி பார்த்துள்ளனர். அதனுள்ளே 9 வெள்ளி உருண்டைகள் இருந்தது. ஆனால், அது வெள்ளி முலாம் பூசப்பட்ட தங்க உருண்டைகள் என்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், 2.42 கிலோ இருந்த அந்த தங்க உருண்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.