ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்துள்ளதால் இந்தியாவில் இன்று (மே 21) துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இது குறித்து நேற்று உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், (மே 21ம் தேதி) இந்தியா முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து இடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும். அரசு சார்பில் நாளை எந்த கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்துக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சென்னை தலைமை செயலகம் மற்றும் போர் நினைவு சின்னம் உள்ளிட்ட இடங்களில் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடபட்டுள்ளது.