ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஜூன் 1-ஆம் தேதி அன்று முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலின் முடிவுகள், கடந்த 4-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், அதிகப்படியான இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள், பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, திங்கள் கிழமை, பாஜக ஆட்சியின் கீழ் உள்ள கூட்டணியின் முதல் கேபினெட் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, யார்? யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட அதன் தேசிய தலைவர் மோகன் பகவத், உறுப்பினர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “ஒரு உண்மையான சேகவர், மக்களுக்காக பணியாற்றும்போது நல்லொழுக்கத்தை பின்பற்றுவார். அவருக்கு ஆணவம் இருக்காது மற்றும் மற்றவர்களை காயப்படுத்தாமல், தன்னுடைய பணியை அவர் செய்வார்” என்று கூறினார்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது, நல்லொழுக்கம் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “மணிப்பூர் மாநிலம் கடந்த ஒரு வருடமாக, நிம்மதியை தேடிக் கொண்டு இருக்கிறது. இந்த விஷயம் முன்னுரிமையின் அடிப்படையில் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டும்.
இந்த மாநிலம், கடந்த 10 வருடங்களாக, அமைதியாக இருந்தது. இதனை பார்க்கும்போது, பழைய துப்பாக்கி கலாச்சாரம் மீண்டும் வந்திருப்பதாக தோன்றுகிறது.
அங்கு அதிகரித்த திடீர் பதற்றத்தில், அம்மாநிலம் இன்னும் எரிந்துக் கொண்டு தான் இருக்கிறது. யார் அதற்கு கவனம் கொடுக்கப்போகிறார்கள்? இதற்கு முக்கியத்துவம் தருவது என்பது நமது கடமை” என்று அவர் பேசினார்.