17-வது ஐபிஎல் தொடரின் 68-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று (மே.18) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவர்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது.
இதன்படி முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் சுமார் 40 நிமிட பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்தது.
மீண்டும் தொடங்கிய போது சென்னை அணியின் ஸ்பின்னர் ரன்கள் உயர்த்தாமல் கட்டுபடுத்தினர். அதன் பிறகு இருவரும் நிதானமாக விளையாடி ரன்னை உயர்த்தினார்கள். ஸ்கோர் 78 ரன்னை எட்டிய போது விராட் கோலி 47 ரன்னில் (29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி அருகில் கேட்ச் கொடுத்து
வெளியேறினார். அடுத்து ரஜத் படிதார் களம் புகுந்தார். சிறிது நேரத்தில் 4-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 54 ரன்னில் (39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து கேமரூன் கிரீன், ரஜத் படிதாருடன் இணைந்தார். வேகமாக மட்டையை சுழற்றிய இருவரும் ரன்வேகத்தை குறையாமல் பார்த்து கொண்டர்.
ரஜத் படிதார் 41 ரன்னில் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சில் டேரில் மிட்செலிடம் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட தினேஷ் கார்த்திக் 14 ரன்னில் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சிலும், மேக்ஸ்வெல் 16 ரன்னில் (5 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஷர்துல் தாக்குர் பந்து வீச்சிலும் டோனியிடம் கேட்ச் ஆனார்கள்.
இதனால் பெங்களூரு அணி சென்னை அணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை அணி தரப்பில் ருதுராஜ் – ரச்சின் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால் சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த டேரல் மிட்சல் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ரஹானே – ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது. ரஹானே வந்ததும் அபாரமாக சிக்ஸ் அடிக்க, மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆடினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 58 ரன்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து இருவரின் அதிரடியால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே 22 பந்துகளில் 33 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து சிவம் துபே களம் புகுந்தார். சிவம் துபேவை கட்டுப்படுத்த பெங்களூரு அணி களத்தடுப்பில் பல்வேறு மாற்றங்களை செய்தது.
இதனால் சிவம் துபே ரன்களை குவிக்க முடியாமல் திணறினார். இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 12வது ஓவரில் சிக்சர் அடித்து ரச்சின் ரவீந்திரா அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது.
ஆனால் அடுத்த ஓவரில் சிவம் துபே செய்த தவறால் ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து கேமரூன் க்ரீன் வீசிய அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் அடிக்க முயன்று சிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த சான்ட்னரும் 3 ரன்களில் வெளியேற, சென்னை அணி 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. பின்னர் ஜடேஜா – தோனி கூட்டணி இணைந்தது.
தோனி(25) ஆட்டமிழந்து வெளியேறினார்
அப்போது சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 24 பந்துகளில் 63 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் யாஷ் தயாள் வீசிய 17வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள் அடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவையாக இருந்தது.
முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் தோனி(25) ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஷர்துல் தாக்கூர் 3வது பந்தில் ரன் சேர்க்க முடியாமல் திணற, 3 பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
4வது பந்தில் ஷர்துல் தாக்கூர் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. சரியாக ஜடேஜா களத்திற்கு வந்தார். வீசப்பட்ட 5வது பந்தில் ஜடேஜாவின் மட்டையில் படாமல் மிஸ்ஸாகியது.
அப்போது பெங்களூரு அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். கடைசி பந்தும் டாட் பாலாக மாறியது. இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. சென்னை அணி வெளியேறியது.