லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும் ஆம் ஆத்மி கட்சி எம்பியுமான சுவாதி மாலிவால் தான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளரான பிபவ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
னது தனி உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,”ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து தலைவர்களையும் பிரதமர் மோடி சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்.
நாளை ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பி, எம்எல்ஏக்களுடன் நண்பகல் 12 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, முடிந்தால் தனது கட்சி தலைவர்களை சிறையில் அடைத்துக் கொள்ளட்டும்” என கூறியுள்ளார்.