தமிழகத்தை மிரட்டும் டெங்கு: ஒரு வாரத்தில் 113 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட தகவலில்,

கடந்த சில நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவி வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் தொடங்கிய 13 நாள்களில் தமிழகத்தில் மொத்தம் 204 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் கடந்த 7 நாள்களில் மட்டும் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. 50 பேர் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி உள்ளது. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் 37 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தந்த மாநகராட்சிகள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு முன்பே ஏடிஎஸ் கொசுப் புழுக்களை அழிக்க மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

காய்ச்சல் ஏற்பட்டால் தாமதப்படுத்தாமல் பொதுமக்கள் உடனே மருத்துவரை அணுகி, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த பரிசோதனை செய்து நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்ய வேண்டும்.

டெங்கு பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News