மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நிதிஷ்குமாருக்கு துணை பிரதமர் பதவியை கொடுத்து, இந்தியா கூட்டணிக்குள் அவரை கொண்டு வர சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டது. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியுள்ளது.
இம்முறை பாஜகவுக்கு தனி பெருபான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 14 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
இந்த இருவரையும் தங்கள் பக்கம் இழுத்துவிட்டால், பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும். அதை கருத்தில் கொண்டே, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்தியா கூட்டணிக்கு வந்தால், துணை பிரதமர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததாகவும் தெரிகிறது. அதே போல சந்திரபாபு நாயுடுவிடமும் பேசி வருவதாக கூறப்படுகிறது.