Connect with us

Raj News Tamil

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும்: காங்கிரஸ்!

அரசியல்

துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும்: காங்கிரஸ்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவை சபாநாயகர் தேர்வு விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கத் தயார். ஆனால், துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையைத்தான் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.

ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நாட்டை நடத்த விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (திங்கள்கிழமை) கூறினார். எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். நாங்கள் ஆக்கபூர்வமாகவே செயல்படுகிறோம்.

சபாநாயகரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் போட்டியின்றி தேர்வு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை கேட்டுக்கொண்டார். அப்போது, இவ்விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் விருப்பம் என்ன என்பதை கார்கே, ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்தார்.

இது குறித்து தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு சொல்வதாக ராஜ்நாத் சிங் அப்போது கூறினார். ஆனால், ராஜ்நாத் சிங் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதை அடுத்து, மல்லிகார்ஜுன் கார்கே, ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது, பிரதமரிடம் பேசிவிட்டு சொல்வதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று நானும், இண்டியா கூட்டணி தலைவர்கள் டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் ராஜ்நாத் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது, தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். எங்கள் கோரிக்கை குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை என்பதால் நாங்கள் மறுத்துவிட்டோம்.

சபாநாயகர் பதவிக்கு போட்டியிட இன்று (செவ்வாய்கிழமை) மதியம் 12 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை. அதன் காரணமாக கொடிக்குண்ணில் சுரேஷ், தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இருந்தாலும், இன்னமும் நாங்கள் காத்திருக்கிறோம். சபாநாயகரை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்வு செய்ய நாங்கள் தயார். ஆனால், எங்கள் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.

ஆளும் கூட்டணியின் வேட்பாளரை சபாநாயகராகவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை துணை சபாநாயகராகவும் தேர்வு செய்வதுதான் மரபு. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த 10 ஆண்டு காலமும், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக பாஜகவுக்குத்தான் நாங்கள் கொடுத்தோம். அப்போது, இதுபோன்ற விவாதத்துக்குக் கூட நாங்கள் இடம் கொடுக்கவில்லை. அதை தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பின்பற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை” எனத் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in அரசியல்

To Top