தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கடந்த வாரம் செய்முறை நடந்து முடிந்தது. இதையொட்டி, வகுப்பறைக்கு சென்ற மாணவ-மாணவிகள், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், வரம்பு மீறி செயல்பட்ட ஒரு சில மாணவர்கள், வகுப்பறையில் இருந்த மின்விசிறி, சுவிட்ச் போர்டு, மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இவர்களைப் போல், சில மாணவிகளும், தங்களுடைய பங்கிற்கு, சில பொருட்களை அடித்து உடைத்தனர்.
இதுகுறித்து அறிந்து வகுப்பறைக்கு வந்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், அந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து, நடந்தவற்றை கூறி, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, மாணவர்கள் வகுப்பறையை அடித்து நொறுக்குவது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், இந்த வீடியோ, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றதையடுத்து, 10 மாணவ-மாணவிகள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.