“என் மண், என் மக்கள்” என்ற நடைபயணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார் அந்தவகையில், தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நேற்று 2வது நாளாக நடைபயணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள லூர்து மாதா அன்னை தேவாலயத்துக்கு, தன்னுடைய கட்சிக்காரர்களுடன் சென்றிருக்கிறார். அப்போது, அண்ணாமலை தேவாலயத்துக்குள் வரக் கூடாது என, அங்கிருந்த கிறிஸ்துவ இளைஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
‘புனிதமான இடத்தில் நீங்கள் வந்து மாலை போடக் கூடாது’ என்று தெரிவித்ததும், அண்ணாமலை, `எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்தேன்’ எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து மாநில தலைவர் அண்ணாமலை, அந்த இளைஞர்களை சமாதானப்படுத்தியும் அவர்களின் கோபத்தை தணிக்க முடியவில்லை.
உடனே அங்கு விரைந்த போலீஸார், அண்ணாமலையுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை, அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அப்போது, `அண்ணாமலை வெளியே போ… பா.ஜ.க வெளியே போ…’ என்று சிலர் கோஷமிட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.