சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழ் ஸ்டூடியோ சார்பில், குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டு, உரையாற்றினார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“நான் அசுரன் திரைப்படம் எடுத்தபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தேன். இதுபோன்ற திரைப்படம் எடுக்கும்போது, அரசியல் ரீதியான எந்தவொரு தவறும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரை சந்தித்தேன். இதுகுறித்து கேட்டபோது, தனிமனிதனால் மாற்றம் நடந்துவிடும் என்பதை மக்கள் மத்தியில் பதிய செய்யாதீர்கள் என்று அவர் கூறினார்.”
இவ்வாறு பேசிய அவர், RSS கும்பல் செய்துக் கொண்டிருக்கும், தவறுகளையும் சுட்டிக்கட்டினார்.
“நாம் ஏற்கனவே நமது அடையாளங்களை இழந்து வருகிறோம். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜசோழனை இந்து அரசனாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும்.
நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்” என்று அந்த உரையில் அவர் பேசியிருந்தார்.