அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவிகித இட ஒதுக்கீட்டில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 1 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துதல்,
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விழிச் சவால் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன தேர்வில் விலக்கு அளித்தல், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்துதல் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
டிபிஐ வளாகம், அண்ணா சாலை, தி நகர் என ஒவ்வொரு நாளும் தடையை மீறி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 8 வது நாளாக இன்றும் சேத்துபட்டு பகுதியில் பார்வையற்றவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தடையை மீறி திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சேத்துப்பட்டு மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சேத்துப்பட்டு கீழ்ப்பாக்கம் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவல் நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து முழுமையாக முடங்கிய நிலையில் நோயாளியை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.