கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்றில் இன்று காலை சத்துணவு கூடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் காயமடைந்தார்.
கடலூர் மாவட்டம் சன்னியாசிப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பாலூர் என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்றி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் பணி வழக்கம்போல் இன்று காலை நடைபெறும்பொழுது இதில் பெண் பணியாளர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் சமையல் பணியில்ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளருக்கு படுகாயம் ஏற்பட்டது.
மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த சத்துணவு சமையலரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சம்பவம் நிகழ்ந்த சமையல் கூடத்தை பார்வையிட்டதுடன், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.