உசிலம்பட்டி கிளைச் சிறையில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களை முறைகேடாக பயன்படுத்தியதாக கிளைச் சிறை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள கிளைச் சிறைச்சாலையில் பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளராக இருந்தவர் கண்ணன். கடந்த ஓர் ஆண்டாக பொறுப்பு அதிகாரியாக இருந்து வந்த இவர் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, நிலக்கடலை போன்ற உணவு பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரியின் அறிவுறுத்தலின்படி, மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் தலைமையிலான உயர் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட போது முறைகேட்டில் ஈடுபட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களை கடத்தி சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறை கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்களை முறைகேடாக பயன்படுத்திய கிளைச் சிறை பொறுப்பு கண்காணிப்பாளர் கண்ணனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.