திருச்சி மாவட்டம், மணப்பாறை பஸ் நிலையத்தில் நேற்று (டிச.25) இரவு ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று தனியாக இருந்ததோடு மலம் கழித்த நிலையில் இருந்ததைப் பார்த்த பொதுமக்கள் குழந்தையின் தாய் யார் என்று நெடுநேரமாக தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் இல்லை. குழந்தையும் அழத் தொடங்கியது.
உடனே இதுபற்றி மணப்பாறை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கிடைத்த தகவலின் பேரில் மகளிர் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா தலைமையிலான மகளிர் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று பெண் குழந்தையை மீட்டனர்.
அப்போது பெண் குழந்தை மலம் கழித்து அழுது கொண்டிருந்தைப் பார்த்து உடனே அதை தூய்மை படுத்தி பின்னர் புத்தாடை வாங்கி வந்து அனுவித்தனர்.
மேலும் அந்த குழந்தையை இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா தாய் போல் அவரே நெடுநேரம் தூக்கி வைத்திருந்தார். பின்னர் அந்த குழந்தையை மணப்பாறை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.
இந்நிலையில் குழந்தையை விட்டுச் சென்ற நபர் யார் என்பது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கிய நிலையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்த போது பெண் ஒருவர் குழந்தையை பஸ் நிலையத்தில் விட்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையை விட்டுச் சென்ற பெண் யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பெண் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குழந்தையை தாய் போல் பராமரித்த மகளிர் இன்ஸ்பெக்டரின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.