தீபாவளி நாளான இன்று (அக்.31) தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகரான டெல்லியில் அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது. பின்னர் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது.
டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 419 ஆக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக அயா நகர் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 308 ஆகவும், ஜஹாங்கீர்புர் பகுதியில் 395 ஆக இருந்தது. இங்கு காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைலை எட்டியுள்ளதாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிக காற்று மாசுபாடானது மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் உடல் ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி மக்கள் அனைவரும் பட்டாசுகளை வெடிப்பதற்கு பதிலாக வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபாவளி பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை வைத்திருந்தார்.
காற்றின் தரம் மோசமடைவதால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு டெல்லி அரசு கேட்டுக்கொண்டது.
மேலும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு சாலையோர மரங்களில் தெளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் மூலம் பட்டாசு வெடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.