அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அடுத்த பெருங்குடி வலையங்குளம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
மாநாட்டில் அவா் பேசியதாவது :
அதிமுக மாபெரும் இயக்கம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கட்சி. 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சிசெய்த கட்சி. எம்ஜிஆர் 1972-ல் தொடங்கிய அதிமுக 51-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுகவை தொடங்கிய 6 மாத காலத்திலேயே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் எம்ஜிஆர். அவரது முகத்தை பார்த்தாலே போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். அப்படி மக்கள் சக்தி பெற்ற கட்சியாக அதிமுகவும், அதன் தலைவர்களும் திகழ்ந்தனர். எம்ஜிஆர் மறைந்த பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று கருணாநிதி கனவு கண்டார். ஆனால், அதிமுக அழியவில்லை. ஒருபோதும் அதிமுகவை அழிக்க நினைக்காதீர்கள். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
மதுரை மண் மிகவும் ராசியானது. இங்கு தொட்டதெல்லாம் துலங்கும். அப்படிப்பட்ட மாவட்டத்தில் முதல்முறையாக, நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாநாடு நடத்தியுள்ளோம். மதுரை மண்ணில் தொடங்கப்பட்ட அனைத்தும் வெற்றிதான்.
திமுக ஆட்சியில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 13 ஆண்டு காலம் இருந்தனர். அப்போது கச்சத்தீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. கடந்த 18-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ராமேசுவரம் சென்று கச்சத்தீவை மீட்போம் என்கிறார். ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை மீட்க போராடினார். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அவர் வழியில் நின்று கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடுவோம்.
தமிழகத்தில் தற்போது சட்டம் – ஒழுங்கு அடியோடு கெட்டுப்போய் உள்ளது. திமுகவின் 2 ஆண்டுஆட்சியில் பின்னடைவைதான் பார்க்கிறோம்.
நீட் விவகாரத்தில் திமுக அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மத்தியில் 2010-ல் காங்கிரஸ் ஆட்சியின்போது சுகாதாரத் துறை அமைச்சராக குலாம்நபி ஆசாத், இணை அமைச்சராக திமுகவின் காந்திசெல்வன் இருந்த காலகட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்.
2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, மு.க.ஸ்டாலின், உதயநிதி போன்றோர், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்து போடப்படும்’’ என்றனர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள். நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக. அதை தடுக்க போராடுவது அதிமுக.
திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த 13 பேர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துவந்தன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும், அதை அவசர அவசரமாக விசாரித்து, 4 அமைச்சர்கள் விடுதலை ஆகியுள்ளனர். இதை சும்மா விடமாட்டோம். உச்ச நீதிமன்றம் சென்று வழக்கை தொடர்வோம். இவ்வாறு அவர் பேசினார்.