புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 8 மாதங்கள் ஆகியும் சீருடை வழங்காததை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி சீருடையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும், மாணவர்களுக்கு தரவேண்டிய புத்தகங்கள், சீருடைகள், இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 6 மாதங்களுக்கு பிறகு, இன்று புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துக் கொண்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி சீருடை அணிந்து வந்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
பேரவையில் கலந்துக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சி தலைவர் இரா.சிவா, பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சீருடை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, திமுக எம்.பி-கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.