மாநில உரிமைகளை காப்பதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக உள்ளார் என்று, திமுக எம்.பி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொ.மு.ச செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திமுக எம்.பி. சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநிலத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களில், மத்திய அரசு ஈடுபடுவதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தான், மிகப்பெரிய வல்லுநர்களை கொண்டு, முதலமைச்சர் ஆய்வு நடத்தி வருவதாகவும், தெரிவித்தார்.
இதன்மூலம், முதலமைச்சர் இந்தியாவிற்கே, முன்னுதாரணமாக உள்ளதாக குறிப்பிட்ட சண்முகம், அவரது முயற்சியால், அனைத்து மாநிலங்களும் பயன் அடையும் என்றும் தெரிவித்தார்.