டெல்லி மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மருத்துவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி ஜெய்த்பூர் பகுதியில் அமைந்துள்ள நீமா மருத்துவமனைக்கு புதன்கிழமை நள்ளிரவில் இரண்டு பேர் விபத்து ஏற்பட்டதாக காயங்களுடன் சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் மருத்துவர் ஜாவேத்தை சந்திக்க வேண்டும் எனக் கூறியதை தொடர்ந்து, மருத்துவமனை ஊழியர்கள் அவரது அறைக்கு இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவர் ஜாவேத்தின் அறைக்குள் நுழைந்தவுடன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இருவரும் தப்பி ஓடியதாக மருத்துவமனை ஊழியர்கள் முதல் கட்டத் தகவலை பகிர்ந்துள்ளனர்.
ஏற்கெனவே, கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்ற பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இரண்டு மாதங்களாக மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் சூழலில், டெல்லியில் மருத்துவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.