‘நான் இங்க தான் இருக்கேன்..அவதூறு பரப்பாதீங்க’ – நடிகர் மோகன்லால்

கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதையடுத்து, மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் விலகினார்.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடிகர் மோகன்லால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மலையாள திரையுலகில் 21 சங்கங்கள் இருக்கும்போது அம்மா சங்கத்தை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? அனைத்துக் கேள்விகளுக்கும் அம்மா சங்கம் மட்டும் எப்படி பதில் சொல்லும் என்று கேட்டார். முன்னதாக அவர் பேசுகையில், நான் எங்கும் ஓடிவிடவில்லை. இங்குதான் இருக்கிறேன். பாலியல் புகார்கள் தொடர்பாக நீதிபதி ஹேமா குழு மேற்கொள்ளும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.

பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றமும், அரசும் தங்கள் கடமையை செய்கின்றன. பாலியல் புகாரால், மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடாது. பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சைகளுக்கு ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் பதில் சொல்லும். எனவே, மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்ப வேண்டாம். வயநாடு போன்ற பேரிடர்களின்போது தொடர்ந்து மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்துள்ளது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேச வேண்டாம் எனவும் செய்தியாளர்களுக்கு மோகன்லால் அறிவுறுத்தினார்.

RELATED ARTICLES

Recent News