அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது செல்லும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளநிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காவல் உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு முடிவு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவில் அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் எதிரொலியாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு காவல் உதவி ஆணையர் ஸ்ரீகாந்த் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News