பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், கூட்டணிக் கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வலுப்பெறத் துடிக்கும் பாஜக, வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற வேண்டுமென்பதில் உறுதியாக உள்ளது.
இந்த சூழலில், பாஜக கூட்டணியில் உள்ள பெரிய கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமியுடன், மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று பழனிசாமி நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்றிரவு அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.