தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநரிடம் மனு கொடுக்கப்போவதாக அதிமுக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று சைதாப்பேட்டை சின்னமலை அருகே பல்லாயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடைபெற்றது. இதன் காரணமாக அண்ணாசாலை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவர்னர் மாளிகைக்குள் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு கொடுத்தார். இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.