மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான மகாயுதி என்ற கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலின் முடிவு கடந்த 23-ஆம் தேதி வெளியான நிலையில், மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அபார வெற்றிப் பெற்றது. என்னதான் வெற்றி பெற்றிருந்தாலும், யார் அடுத்த முதல்வர் என்பதில், இந்த கூட்டணி கட்சிகளுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நடப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணியின் தலைவர்கள் அடங்கிய மீட்டிங், டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதலமைச்சர் யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து, மும்பையில் அடுத்த மீட்டிங் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே, தனது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் தான், அவர் தனது சொந்த ஊருக்கு பயணம் செய்திருப்பதாக, அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையே, இதற்கு விளக்கம் அளித்து, அவரது கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், உடல்நலம் சரியில்லாததால் தான், ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு சென்றிருப்பதாகவும், பதவி கிடைக்காத விரக்தியில் செல்லவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.