சோன்பத்ரா,
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் பழங்குடியின வாலிபர் ஒருவர் மீது மற்றொரு பிரிவை சேர்ந்த ஒருவர் சிறுநீர் கழித்து அவமதித்த சம்பவம் நாடு முழுவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் தலித் வாலிபர் ஒருவரை, மற்றொருவர் தாக்கி காலணியை நக்க வைத்த கொடுமை அரங்கேறி உள்ளது.
அங்குள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திர சமர் என்ற தலித் வாலிபர் கடந்த 6-ந் தேதி தனது தாய்மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மின்தடை ஏற்பட்டது.
உடனே ராஜேந்திர சமர் அதை சரி செய்ய முயன்றார். அப்போது அங்கே வந்திருந்த மின்வாரிய ஒப்பந்த ஊழியர் தேஜ்பாலி சிங் படேல், சமர் மீது கடுமையான கோபம் கொண்டு சாதியை கூறி பலமாக தாக்கினார்.
அத்துடன் சமரை கீழே தள்ளி அவரது கையை முறுக்கி மீண்டும் மீண்டும் தாக்கினார். பின்னர் அவரது மார்புப்பகுதியில் ஏறி நின்றதுடன், தனது காலணியையும் நக்க வைத்து கொடுமைப்படுத்தினார்.
இந்த பயங்கர காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த கொடூரத்தை நிகழ்த்திய மின்வாரிய ஊழியர் தேஜ்பாலி சிங் படேலை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர் மின்வாரிய பணியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார்.
நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பா.ஜனதா அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.