சென்னை எண்ணூரில் தனியார் உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. பயிர்களுக்கு தேவையான பல்வேறு வகையான ரசாயன உரங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரசாயன உரங்கள் தயாரிக்க தேவையான அமோனியா உள்ளிட்ட மூலப்பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன.
கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு திரவ அமோனியாவை மாற்ற ஏதுவாக கடலில் இருந்து 1 கிலோமீட்டர் வரை தொழிற்சாலைக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் குழாய்களை இணைக்கப்பட்டு வாயுவை கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு மாற்றும் பணி நடைபெற துவங்கியது. குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நள்ளிரவு 12 மணியளவில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாயு கசிவு சரிசெய்ததையடுத்து தற்போது அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பியது.
அமோனியா வாயு கசிந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது. தொடர்ந்து, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை இயக்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக தொழிற்சாலையை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நள்ளிரவு முதல் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.