நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது. 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா தனது ஆட்டத்தை துவங்கியது. ஆனால், 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்கா அணி படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில், விராட் கோலி 121 பந்துகளுக்கு 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது இந்த 49-வது சதம் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் விராட்.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் விராட் கோலிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அதில், “விராட் நன்றாக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள், அடுத்த சில நாட்களிலேயே 49லிருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.
டெண்டுல்கருக்கு பதிலளிக்கும் விதமாக ‘எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது எனக்கு மிகப்பெரிய பெருமை. இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம், நான் கடந்து வந்த நாட்கள் மற்றும் நான் சச்சினின் ஆட்டத்தை டிவியில் பார்த்து வளர்ந்து வந்தவன். அவரிடம் இருந்து பாராட்டுகள் கிடைப்பது மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன் ‘ என விராட் கோலி தெரிவித்துள்ளார்.