காலாவதியான குடிநீர் பாட்டில்கள், சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் அதிக அளவில் செல்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது காலாவதியான குடிநீர் பாட்டில்கள், காலாவதியான சிப்ஸ் உள்ளிட்ட உணவு பொருட்கள் தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்ட உணவு பொருட்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். அதிரடியாக அடுத்தடுத்த கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.