காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் ஊக்குவிக்கப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஹரியாணாவின் ரேவாரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடிநேற்று பங்கேற்றார். அப்போது ரூ.9,750 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார், நிறைவுற்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அதை நாங்கள்நனவாக்கி உள்ளோம். அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அந்த கனவை, நாங்கள் நனவாக்கி உள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. பாஜக ஆட்சியில் 370-வது சட்டப்பிரிவு வெற்றிகரமாக நீக்கப்பட்டு காஷ்மீர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகளை வழங்குவோம் என்று மக்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். இதன்மூலம் பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்டதொகுதிகளில் வெற்றி பெறும்.
காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு குடும்பத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் ஊக்குவிக்கப்பட்டது. நாடுமுழுவதும் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடைபெற்றன. ராணுவம், ராணுவ வீரர்களின் மனஉறுதிகுலைக்கப்பட்டது. இதுதான் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளாகும்.
எனக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து சதி செய்கிறது. ஆனால் மக்கள் எனக்கு அரணாக உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள், தொண்டர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.