தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் தமன்னா. இவரது செல்போன் எண்ணுக்கு, அடையாளம் தெரியாத நபர், வலைதள லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பின்னர், செல்போனில் தொடர்பு கொண்ட அவர், மின்சார கட்டணத்தை நீங்கள் இன்னும் செலுத்தவில்லை என்றும், உடனடியாக செலுத்துங்கள் என்றும் கூறியுள்ளார். இதற்கு, தான் ஏற்கனவே மின்சார கட்டணத்தை செலுத்திவிட்டேன் என்று தமன்னா கூறியுள்ளார்.
இருப்பினும், அதனை மறுத்த அந்த நபர், தொடர்ச்சியாக மின்சாரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால், மின் இணைப்பை துண்டித்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளார். ஆனால், மின் கட்டணம் செலுத்தியதில் உறுதியாக இருந்த தமன்னா, அந்த நபரின் அழைப்பை, துண்டித்துள்ளார்.
அதன்பிறகே, அந்த வலைதள லிங்க் போலியானது என்றும், மோசடி செய்வதற்காக அவரது செல்போனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தமன்னா, இதுமாதிரி யாராவது உங்களை மிரட்டினால், பயப்பட வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருங்கள் என்றும் கூறியுள்ளார்.