ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். பூசாரியாக பணியாற்றி வரும் இவர், தான் வசித்து வரும் பகுதியில் உள்ள மக்களிடம், பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி, பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, நிர்வாண பூஜை செய்வதற்கு பெண்கள் தேவை என்று தனது நண்பரிடம் கூறியுள்ளார்.
மேலும், இந்த பூஜையில் கலந்துக் கொள்ளும் பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, இந்த பூஜை செய்தால், புதையல் இருக்கும் இடத்தையும் கண்டுபிடித்துவிடலாம் என்று நண்பரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அவர், தனக்கு தெரிந்த 2 பெண்களை, பூஜைக்கு அழைத்து வந்துள்ளார். பூஜை நடந்தபோது, அந்த பெண்களிடம், சாமியார் ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளார். இதனால் அச்சம் அடைந்த அவர்கள், கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து தப்பி ஓடிய அவர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாமியார் நாகேஸ்வர ராவ், அவரது நண்பர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய வேறு சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.